ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 23 லட்சம் ரொக்கம் பறிமுதல்
ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 23 லட்சம் ரொக்கம் பறிமுதல்
ADDED : மார் 18, 2024 06:22 AM

பெங்களூரு :  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, பெங்களூரு, பெலகாவியில் மூன்று இடங்களில், ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 23 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ரொக்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. பெங்களூரு மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகருக்குள் நுழையும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று பெங்களூரின் அசோக் நகரில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஒரு காரில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 200 ரூபாய் இருந்தது. இது தொடர்பாக கார் ஓட்டியவரிடம் கேட்டபோது, அவர் கோழிப்பண்ணை வைத்திருப்பதாகவும், கோழிகள் விற்ற பணத்தை கொண்டு வருவதாகவும் கூறினார்.
விற்பனை செய்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவரிடம் ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.
l நெலமங்களா டவுனில் வாகன சோதனையின் போது, 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், காரில் கொண்டு சென்றது தெரியவந்தது. ஆவணங்கள் இல்லாததால், அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
l பெலகாவி மாவட்டம், முட்லகியின் ஹல்லுார் சோதனைச் சாவடியில், காரில் சோதனையிட்ட போது, கருப்பு கவரில் 2 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
நேற்று மட்டும் 23 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அசோக் நகரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இடம்: பெங்களூரு.

