நண்பருடன் வந்த இளைஞரை தாக்கிய 10 செக்யூரிட்டிகள் மீது வழக்கு
நண்பருடன் வந்த இளைஞரை தாக்கிய 10 செக்யூரிட்டிகள் மீது வழக்கு
ADDED : பிப் 22, 2024 07:14 AM

எலஹங்கா: மாரசந்திராவில் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பரை இருசக்கர வாகனத்தில் இறக்கிவிடச் சென்ற இளைஞரை, குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரி, பத்து செக்யூரிட்டிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர். அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தொட்டபல்லாபூரின் புறநகரில் உள்ள பழனஜோகிஹள்ளியைச் சேர்ந்தவர் அர்ச்சன், 19. அங்குள்ள கோழிக்கடையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 18ம் தேதி, பெங்களூரு, எலஹங்காவின் மாரசந்திராவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பர் ரபியை இறக்கிவிட இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது அர்ச்சனுக்கும், அங்கிருந்த நிதிஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து புறப்பட்ட அர்ச்சனை, குடியிருப்பு பாதுகாப்பு அதிகாரி மஞ்சுநாத் மற்றும் பத்து செக்யூரிட்டிகள் சேர்ந்து தங்கள் கையில் இருந்த தடிகளால் தாக்கியுள்ளனர்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், அவர்களிடம் இருந்து அர்ச்சனை விடுவித்து, 'இளைஞரை அடிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?' என எச்சரித்தனர். பின், அர்ச்சனை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அப்போது, பாதுகாப்பு அதிகாரி மஞ்சுநாத், 'குடிசை பகுதியைச் சேர்ந்தவன், இங்கு வந்தால் கொன்றுவிடுவேன்' என, மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அர்ச்சனின் சகோதரர் தர்ஷன், ராஜானுகுண்டே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.