அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் 375 பேர் மீதான வழக்கு ரத்து
அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் 375 பேர் மீதான வழக்கு ரத்து
ADDED : மார் 19, 2024 11:01 PM
பெங்களூரு : கொரோனா பரிசோதனை செய்ய சென்ற அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, 375 பேர் மீது பதிவான வழக்கை, கர்நாடகா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பெங்களூரு பாதராயனபுராவில் கடந்த 2020 ஏப்ரல் 19ம் தேதி, மாநகராட்சி, ஆஷா ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர். அப்போது 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது. அவர்களை தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநகராட்சி, ஆஷா ஊழியர்களை ஒரு கும்பல் தாக்கியது. மருத்துவ உபகரணங்கள், மேஜைகளும் சூறையாடப்பட்டன. இதுகுறித்த புகாரில் 375 பேர் மீது, கர்நாடகா இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி இருந்தது.
சாட்சியங்கள் உறுதி
இந்நிலையில், 375 பேர் சார்பில், கடந்த 2021 ல் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 'மாநகராட்சி, ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஒன்றும் தெரியாத எங்கள் மீது, போலீசார் கண்மூடித்தனமாக வழக்குப்பதிவு செய்தனர். இதனால் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி நடராஜன் விசாரித்து வந்தார். நேற்றும் மனு மீதான விசாரணை நடந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், 'கொரோனா பாதித்த நபர்களை, தனிமைப்படுத்துதல் மையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் முன்னேற்பாடுடன் வரவில்லை. தாக்கப்பட்ட ஊழியர்களுக்கு காயமும் ஏற்படவில்லை. தவறு செய்யாதவர்கள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. இதை நேரில் பார்த்த சாட்சியங்களும் உறுதிப்படுத்தி உள்ளன' என்றார்.
உண்மைத்தன்மை
அரசு வக்கீல் வாதாடுகையில், 'குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக, போலீஸ் நிலையத்தில் 5 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பெரும்பாலோனார் அனைத்து வழக்குகளிலும் தொடர்புடையவர்கள். இதனால் ஜாமின் வழங்கக் கூடாது' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நடராஜன் கூறியதாவது:
போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 51 பேரின் பெயர், விபரங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் போலீசில் புகாரும் செய்யவில்லை. குற்றஞ்சாட்டபட்டவர்கள் மீதான குற்றத்தின் உண்மை தன்மை சரியாக இல்லாமல் இருந்தால், ஒரு வழக்காக இருந்தாலும் ரத்து செய்யப்படும். சரியான ஆதாரங்கள் இல்லாதால், 375 பேர் மீதும் பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.

