அப்பாவு மீதான வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
அப்பாவு மீதான வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
ADDED : நவ 28, 2024 06:45 AM

புதுடில்லி; கடந்த 2023ல், சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ''தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்தனர்.
''தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், அதை ஏற்க மறுத்து விட்டார். அதனால் எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வில் சேரும் நிகழ்வு நடக்கவில்லை,'' என தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சு, அ.தி.மு.க.,வுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
அதனால், சபாநாயகர் அப்பாவு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி இணைச் செயலர் பாபு முருகவேல், அவதுாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அப்பாவுவின் கோரிக்கையை ஏற்று, அவர் மீதான அவதுாறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.