பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பரமேஸ்வர் - அசோக் வாக்குவாதம்
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பரமேஸ்வர் - அசோக் வாக்குவாதம்
ADDED : பிப் 16, 2024 07:23 AM

பெங்களூரு: பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மங்களூரில் பள்ளி முன் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பரத் ஷெட்டி, வேதவியாஸ் காமத் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. ஆனால், அந்த பள்ளிக்கு தான் செல்லவே இல்லையென, எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி கூறி உள்ளார்.
தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்தது குறித்து, சட்டசபையில் நேற்று பரஷ் ஷெட்டி பேசினார். அப்போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், 'பொய் வழக்குப்பதிவு செய்த எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என்றனர்.
இதற்கு விளக்கம் அளித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேசுகையில், ''எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி அந்த பள்ளி முன் செல்லவில்லை. இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் பேசி தகவல் பெற்றேன். ஆனால் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்று, 'குழந்தைகளை அந்த கிறிஸ்துவப் பள்ளிக்கு அனுப்ப முடியாது' என, மிரட்டும் வகையில் பேசி உள்ளார். புகாரில் பரத் ரெட்டி பெயரும் இருந்ததால், அவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அனைத்து கோணங்களிலும் நாங்கள் விசாரித்து வருகிறோம்,'' என்றார்.
முட்டாள்தனமான பேச்சு
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் அசோக், ''உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது. நானும் உள்துறை அமைச்சராக இருந்தவன். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து, ஹிந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கூடாது என்று, எனக்கு அழுத்தம் வந்தது. ஆனாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தோம். நீங்களும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
அதன்பின்னர் பேசிய பரமேஸ்வர், ''எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி, பிரச்னையை துாண்டு வகையில், 'எக்ஸ்' பக்கத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார். இதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டார்.
அப்போது கோபம் அடைந்த பரத் ஷெட்டி, பரமேஸ்வரை பார்த்து, கையை நீட்டி ஏதோ கத்திப் பேசினார். இதனால் கடுப்பான பரமேஸ்வர், பரத் ஷெட்டியை பார்த்து, ''எதற்கு கத்துகிறீர்கள்; யாரை மிரட்ட பார்க்கிறீர்கள்? அது நடக்காது. மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். என்ன முட்டாள்தனமான பேச்சு?'' என்று கூறினார்.
சபை ஒத்திவைப்பு
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ., உறுப்பினர்கள் கோஷம் எழுப்ப, பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. யார் என்ன பேசுகின்றனர் என்றே கேட்கவில்லை.
இதன்பின்னர் பரத் ஷெட்டி பேசுகையில், ''தவறு செய்த ஆசிரியை மீதான புகார் குறித்து விசாரித்த கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்,'' என்றார்.
இதற்கு பள்ளிகல்வி அமைச்சர் மது பங்காரப்பா மறுப்பு தெரிவித்தார். அவரை வேறு காரணத்திற்காக மாற்றி உள்ளதாக கூறினார். இதை பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஏற்க மறுத்து, சபாநாயகர் இருக்கை முன் சென்று, போராட்டம் நடத்த குவிந்தனர். இதனால் அவையை இன்றைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.