பொய் செய்தி பரப்பியதாக பா.ஜ., - எம்.பி., மீது வழக்கு
பொய் செய்தி பரப்பியதாக பா.ஜ., - எம்.பி., மீது வழக்கு
ADDED : நவ 09, 2024 01:11 AM

ஹாவேரி: பொய் செய்தியை பரப்பியதாக, பெங்களூரு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பலருக்கும், 'வக்பு வாரிய நிலத்தை ஆக்கிரமித்து, விவசாயம் செய்கிறீர்கள்.
'அந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு, எதிர்க்கட்சி யான பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, 'விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்கள் வாபஸ் பெறப்படும்' என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
இந்நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தனது எக்ஸ் வலைதளத்தில், 'ஹாவேரி விவசாயி ருத்ரப்பாவின் விவசாய நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியதால், அவர் தற்கொலை செய்து கொண்டார்' என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஹாவேரி எஸ்.பி., அன்சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ருத்ரப்பா, விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தையும், தனது மகன் இறப்புக்கும், வக்பு வாரியத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்' என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, சமூக வலைதளத்தில் தவறாக செய்தி பரப்பியதாக, தேஜஸ்வி சூர்யா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ''வக்பு வாரியத்திடம், விவசாயி ருத்ரப்பா நிலம் சென்றதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக, அவரின் குடும்பத்தினர் பேசிய வீடியோ, ஊடகத்தில் வெளியானது. என்மீது வழக்கு பதிவு செய்ததில் சதித்திட்டம் உள்ளது,'' என்றார்.