சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான வழக்கு மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'
சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான வழக்கு மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'
ADDED : மார் 20, 2024 01:17 AM
புதுடில்லி, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களுக்கு, மூன்று வாரத்திற்குள் உரிய பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், சமீபத்தில் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த சட்டத்தை உடனே அமல்படுத்தியதை தடுத்து நிறுத்தக்கோரியும், அதுவரை இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பல தரப்பினர் மனு தாக்கல் செய்த்னர்.
எனினும், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் தலைமை சொலிச்சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “குடியுரிமை திருத்தச்சட்டத்தின் வாயிலாக எந்தவொரு நபரின் குடியுரிமையும் பறிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்; நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள, 20 மனுக்களுக்கு பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்,” என, கேட்டுக்கொண்டார்.
இதை பதிவு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சி.ஏ.ஏ., சட்டத்தை அமல்படுத்த தடைவிதிக்கக்கோரிய மனுக்கள் மீது மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

