இலவசங்களுக்கு எதிரான வழக்கு: ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
இலவசங்களுக்கு எதிரான வழக்கு: ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : மே 28, 2024 06:33 AM

புதுடில்லி: கர்நாடகாவின் சாம்ராஜ்பேட் சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர் சஷாங்கா ஜே.ஸ்ரீதரன் என்பவர், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2023ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, காங்., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல அம்சங்கள் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது.எனவே, சாம்ராஜ்பேட் தொகுதியில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் ஜமீர் அகமது கானின் வெற்றியை தகுதியற்றதாக அறிவிக்க கோரினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்படுவது ஊழலுக்கு வழிவகுப்பதாக வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தற்போதைய வழக்கில் எழுப்பப்பட்டுள்ள இந்த கேள்விக்கு விரிவான பதில் அளிக்க வேண்டிய தேவை இப்போது எழவில்லை. பொருத்தமான வழக்கில் அதற்கான பதில் அளிக்கப்படும். மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்கு தடை கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில், மனுதாரரின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.