நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரில் வழக்கு ரூ.8,000 கோடி தேர்தல் பத்திரம் வாங்க வைத்த புகார்
நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரில் வழக்கு ரூ.8,000 கோடி தேர்தல் பத்திரம் வாங்க வைத்த புகார்
ADDED : செப் 28, 2024 11:51 PM

பெங்களூரு: பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி, 8,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சுகாதார அமைச்சர் நட்டா, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மீது, பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மிரட்டல்
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர், ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் என்ற அமைப்பின் இணை தலைவர் ஆதர்ஷ் அய்யர், 50; இவர், ஏப்ரல் 15ல் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தேர்தல் பத்திரம் வாங்கி பா.ஜ.,வுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்க துறையினர், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, டில்லியில் உள்ள பா.ஜ., அலுவலக ஊழியர்கள், கர்நாடக பா.ஜ., முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல், தற்போதைய பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, கர்நாடக பா.ஜ., அலுவலக ஊழியர்கள் மிரட்டி உள்ளனர்.
பணம் தராவிட்டால் அமலாக்கத் துறை வாயிலாக, 'ரெய்டு' நடத்துவோம் என்று கூறி, 8,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்து உள்ளனர். இது குறித்து, பெங்களூரு திலக்நகர் போலீஸ் நிலையத்தில் மார்ச் 30ம் தேதி புகார் செய்தேன்.
பெங்களூரு தென்கிழக்கு மண்டல டி.சி.பி.,யிடம் ஏப்., 2ல் புகார் அளித்தேன். என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.ஆர்.பி.சி., 156 -- 3ன் கீழ், மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.
சந்தேகம்
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி கே.என்.சிவகுமார், திலக்நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி, போலீசார் நேற்று மதியம் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், 'ஏ - 1' ஆக நிர்மலா சீதாராமன், ஏ - 2 ஆக அமலாக்க துறை, ஏ - 3 ஆக நட்டா, ஏ - 4 ஆக நளின்குமார் கட்டீல், ஏ - 5 ஆக விஜயேந்திரா, ஏ - 6 ஆக பிறர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், “நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பின்னணியில், முதல்வர் சித்தராமையா இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
தேர்தல் பத்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றால், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் மீதும் நடவடிக்கை வேண்டும். நிர்மலா சீதாராமன் எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்ய மாட்டார்,” என்றார்.
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறுகையில், “மூடா முறைகேடு வேறு, தேர்தல் பத்திர வழக்கு வேறு. தேர்தல் பத்திரத்தின் மூலம் கிடைத்த பணத்தை, நிர்மலா சீதாராமன் தன் சொந்த தேவைக்கு பயன்படுத்தவில்லை.
''கட்சிக்கு தான் வாங்கி கொடுத்து உள்ளார். அவரை ராஜினாமா செய்ய சொல்வதற்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு தகுதி இல்லை,” என்றார்.