ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு தடை
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு தடை
ADDED : மார் 18, 2025 05:43 AM

புதுடில்லி : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2016 - 2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு, 3 கோடி ரூபாய் வரை சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.
மேல்முறையீடு
ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்க, அந்த புகார் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி, அவருக்கு நெருக்கமான விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், புகார் அளித்த ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனுதாக்கல் செய்திருந்தார். அதில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக போலீசார் காலதாமதம் செய்வதாக கூறி, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மொழிபெயர்ப்பு
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த கோப்புகள் மீது கவர்னர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். கூடவே கவர்னர் தரப்பு, இது சம்பந்தமாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'கவர்னர் முதலில், 'வழக்கில் தொடர்புடைய குறிப்பிட்ட சில ஆவணங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து தந்தால் போதும்' என்று கூறியிருந்தார்.
ஆனால், சமீபத்தில் மற்றொரு கடிதம் எழுதி, அதில், 400 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ள ஆவணங்கள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்து தர வேண்டும் என கேட்டுள்ளார்' என்றனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், 'தமிழக கவர்னரின் செயல்பாடுகள், இந்த விவகாரத்தில் வேண்டும் என்றே காலதாமதம் செய்வது போல இருக்கிறது' என, அதிருப்தி தெரிவித்தனர். எனினும், 'கவர்னர் கேட்ட ஆவணங்களை இரண்டு வார காலத்திற்குள் தமிழகம் வழங்க வேண்டும். அதன்பின், கவர்னர் இந்த விவகாரத்தில் உரிய முடிவை எடுக்க வேண்டும்.
'ஏற்கனவே, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்றும் உத்தரவிட்டனர்.