செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜன 05, 2024 11:44 AM

புதுடில்லி: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீட்டிப்பது குறித்து முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (ஜன.,5) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை; அமைச்சராக நீடிப்பதை முதல்வர் தான் முடிவு எடுக்க முடியும். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை' எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.