ADDED : ஜன 25, 2024 04:39 AM

பெங்களூர : சாலையை மறித்து தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடத்தியதாக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட, 25 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் கோவிலுக்குள் நுழைய, அசாம் மாநில பா.ஜ. அரசு அனுமதி மறுத்தது. இதை கண்டித்து நேற்று முன்தினம் கர்நாடகாவில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அன்று இரவு பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையை மறித்து, கர்நாடகா இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட் தலைமையில், இளைஞர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீப்பந்தம் ஏந்திச் சென்றபோது, காங்கிரசார் அலட்சியமாகவும் நடந்து கொண்டனர்.
இதையடுத்து ஐகிரவுண்ட் போலீசார், ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, தீப்பந்தங்களை அணைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சச்சின் அளித்த புகாரில், முகமது நலபட் உட்பட 25 பேர் மீது, வழக்குப்பதிவாகி உள்ளது.