ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு : தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு என்ன?உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு : தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு என்ன?உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
ADDED : ஜன 21, 2026 10:26 PM

'தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணத்துக்கு உச்ச வரம்பை யார் நிர்ணயிப்பது?' என, 2011ல், கொளத்துாரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும், அந்த தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, துரைசாமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது:துணை முதல்வராகவும், தி.மு.க., பொருளாளராகவும் இருந்த ஸ்டாலின், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தார். கொளத்துாரில் வெற்றி பெற மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார். ஓட்டுப்பதிவு நாளில் கூட, 2,000 - 5000 - 10,000 ரூபாய் வழங்கி, தனக்கு ஓட்டு போடும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார். 2011 ஏப்., 12ல், ஒரு வாகனத்தில் இருந்த, 1.80 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது, ஸ்டாலின் மற்றும் அவரது கட்சிக்கு சொந்தமானது. இந்த பணம், கொளத்துார் தொகுதி வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு காவல் துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர். ஓட்டு எண்ணிக்கையின் போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்தனர். பல இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. பின், சரி செய்யப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஆனால் இதுபற்றி எங்களுக்கு தகவல் வழங்கவில்லை.கொளத்துாரில் உள்ள ஈஸ்வரி என்ற தனியார் மருத்துவமனையில் வைத்து, மகளிர் சுய உதவி குழு வாயிலாக தி.மு.க., நிர்வாகிகள் பணம் வினியோகித்தனர். இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்ததில், தகவல் தராமல், 16 பெண்கள் தப்பிச் சென்றனர்.
அப்போது, சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்களின் கைகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. குறைந்தபட்சம், 50,000 ரூபாய்க்கு மேல் ஒவ்வொருவரிடமும் பணம் இருந்தது. இதை, இந்த வழக்கில் சாட்சியம் அளித்த நபர் கூறியுள்ளார்.தேர்தல் நேரங்களில் வரம்பில்லாமல் தண்ணீர் போல் பணத்தை செலவழிப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களை பொறுத்தவரை குறைந்தபட்சம், 50 கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். அதேசமயம், எம்.பி.,யாக இருந்தால் 100 - 200 கோடி ரூபாய் என, கணக்கே இல்லாமல் பணத்தை செலவழிக்கின்றனர். தேர்தலில் ஒரு கட்சி எவ்வளவு பணத்தை செலவழிக்கிறது என்பதற்கு கணக்கே இல்லை; வரம்பும் கிடையாது. இது ஒரு மிகப்பெரிய பிரச்னை.இவ்வாறு அவர் வாதிட்டார்.
ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேர்தலில் அரசியல் கட்சிகள் பணத்தை செலவு செய்ய உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டுமென, பல காலமாக தான் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'தேர்தலில் கட்சிகள் பணத்தை செலவு செய்ய, உச்ச வரம்பை யார் நிர்ணயிக்க வேண்டும்?' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் கபில் சிபில், ''பார்லி., தான் இது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும். உச்ச வரம்பு வரும்பட்சத்தில், இது போன்ற பல பிரச்னைகள் தீர்வுக்கு வரும்,'' என்றார்.இந்த வழக்கு, நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -

