ADDED : ஜன 14, 2024 11:36 PM

கார்வார்: 'மசூதியை இடிப்போம்' என்று கூறிய, பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே மீது குமட்டா போலீசார், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
உத்தர கன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குமட்டாவில் நடந்த பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் அனந்த்குமார் ஹெக்டே பேசுகையில்,''பாபர் மசூதி போன்று, பட்கலில் உள்ள மசூதியையும் இடிப்போம். இது எனது முடிவு இல்லை. ஹிந்து சமூகத்தின் முடிவு.
'ஹிந்து கோவில்கள் இருந்த இடங்களில், மசூதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதை மீட்கும் வரை, ஹிந்து சமூகம் ஓயாது.
பழிவாங்குவதை நிறைவேற்றவில்லை என்றால், நமது உடலில் ஓடுவது, ஹிந்து ரத்தம் இல்லை' என்று சர்ச்சையாக பேசி இருந்தார்.
முதல்வர் சித்தராமையாவை எங்கள் எதிரி என்று கூறியதுடன், ஒருமையிலும் பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், அனந்த்குமார் ஹெக்டே மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505 - பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேசுவது, 153 கலவரத்தை துாண்டுதல் - ஆகிய 2 பிரிவுகளின் கீழ், குமட்டா போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.