தொழிலாளிகள் மீது தாக்குதல் செங்கல் சூளை அதிபர் மீது வழக்கு
தொழிலாளிகள் மீது தாக்குதல் செங்கல் சூளை அதிபர் மீது வழக்கு
ADDED : ஜன 21, 2025 07:18 AM
விஜயபுரா: மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாட, ஊருக்கு சென்று தாமதமாக வந்ததால், மூன்று தொழிலாளர்களை கயிற்றில் கட்டி வைத்து, இரும்புத்தடியால் அடித்த செங்கல் சூளை உரிமையாளர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
பாகல்கோட்டின், ஜக்கலிகா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதாசிவ மாதர், 22, பபலாதி, 24, உமேஷ், 24; கூலித் தொழிலாளர்கள். இவர்கள், விஜயபுரா, காந்தி நகரின், ஸ்டார் சவுக் அருகில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன் உரிமையாளர் கேமு ராத்தோடிடம் முன்பணம் பெற்றிருந்தனர்.
மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். பண்டிகை முடிந்தவுடன் வராமல், நான்கு நாட்கள் தாமதமாக நேற்று பணிக்கு வந்தனர். இதனால், கோபமடைந்த செங்கல் சூளை உரிமையாளர் கேமு ராத்தோட், மூவரிடமும் கேள்வி எழுப்பினார்.
தொழிலாளர்களும் பாக்கியுள்ள பணிகளை விரைந்து முடித்து தருவதாக உறுதி அளித்தும், கேமு ராத்தோட் பொருட்படுத்தவில்லை. மூவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவர்களை கயிற்றால் கட்டி, இரும்புக் குழாயால் மனம் போனபடி அடித்துத் தள்ளினார்.
வலி தாங்க முடியாமல் தொழிலாளர்கள் கதறி அழுதும், மனம் இரங்காமல் தொடர்ந்து தாக்கினார். இதை கண்ட அப்பகுதியினர், தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அங்கு சென்று விசாரணை நடத்துகின்றனர். செங்கல் சூளை உரிமையாளர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

