9ம் வகுப்பு மாணவி பலாத்காரம் நான்கு சிறுவர்கள் மீது வழக்கு
9ம் வகுப்பு மாணவி பலாத்காரம் நான்கு சிறுவர்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 16, 2025 10:09 PM
காஜியாபாத்:அடுக்குமாடி குடியிருப்பில், ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, நான்கு சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் காஜியாபாத் நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவி, 'இன்ஸ்டாகிராம்' சமூக தளைத்தில் ஒரு சிறுவனுடன் நட்பில் இருந்தார். இருவரும் சந்திக்க திட்டமிட்டனர்.
கடந்த, 13ம் தேதி தன் வீட்டுக்கு வருமாறு மாணவி அழைப்பு விடுத்தார். அதன்படி காலை, 11:30 மணிக்கு அந்தச் சிறுவன் வந்தான். அப்போது, மாணவியின் தாய் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தார்.
ஆனால், தன் நண்பர்கள் மூன்று பேரையும் அந்தச் சிறுவன் அழைத்து வந்திருந்தான்.
மாணவி வீட்டுக்குள் புகுந்த நான்கு பேரும் ஒரு அறைக்குள் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அப்போது, வீடு திரும்பிய தாய், கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டுக்குள் தன் மகளுடன் நான்கு சிறுவர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தன் மகளை மட்டும் அறையில் இருந்து வெளியே இழுத்த அவர், சிறுவர்களை அறைக்குள் வைத்து பூட்டினார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், போலீசார் வருவதற்கு முன், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் வந்து, அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறுவர்களை விடுவித்தனர்.
சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி, நான்கு சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்பதால், நான்கு சிறுவர்களையும் கைது செய்யவில்லை என போலீசார் கூறினர்.