ADDED : ஏப் 10, 2025 08:37 PM
ரோஹிணி: போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இந்திரா காந்தி மருத்துவமனை டாக்டர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம் நாட்டு பாஸ்போர்ட் தவிர போர்த்துக்கீசிய போலி பாஸ்போர்ட் வைத்திருந்த குற்றச்சாட்டில் நிஷித் குமார் ராஜேந்திரபாய் படேல் என்பவரை டில்லி போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, தான் சித்ரவதை செய்யப்பட்டதாக நிஷித் குமார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
கூடுதல் நீதித்துறை நீதிபதி பிரணவ் ஜோஷி, இதுகுறித்து விசாரித்தார். நிஷித் குமாரை மருத்துவப் பரிசோதனை செய்ததாக கூறி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பரிசீலித்தார்.
அவர் நலமுடன் எந்த காயமும் இன்றி இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் நிஷித் குமார் காயங்களுடன் இருப்பதை அறிந்த நீதிபதி, போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் பொய்யான மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உடந்தையாக இருந்த இந்திரா காந்தி மருத்துவமனை டாக்டர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்டார்.
டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

