ரூ.90 லட்சம் பேசி ரூ.80 லட்சம் சம்பளம்; ஐ.டி., நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு
ரூ.90 லட்சம் பேசி ரூ.80 லட்சம் சம்பளம்; ஐ.டி., நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு
ADDED : ஏப் 21, 2025 04:59 AM

பெங்களூரு : பெங்களூரில், பேசிய சம்பளத்தை விட குறைவாக சம்பளம் வழங்கி மோசடி செய்த, தனியார் ஐ.டி., நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில், 'பீட்டாபிளக்ஸ்' என்ற பெயரில், ஐ.டி., கன்சல்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அனிமேஷ் குமார்; தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உத்கர்ஷ் சின்ஹா; கணக்கு தணிக்கையாளராக பவன் உள்ளனர்.
இந்நிறுவனத்தில், 2023 பிப்ரவரியில், சரவணன் என்பவர் பணிக்கு சேர்ந்தார். செயற்கை நுண்ணறிவு, டெவலப்மென்ட் செயலிகள், தகவல் பாதுகாப்பு ஆகியவற்றில், 15 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர் என்பதால், சரவணனுக்கு ஆண்டுக்கு, 90 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக, நிறுவன அதிகாரிகள் கூறி இருந்தனர்.
சரவணன் பணிக்கு சேர்ந்த பின், பல நிறுவனங்களுடன் பீட்டாபிளக்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைத்தது. இதன் வாயிலாக, 20 கோடி ரூபாய்க்கு வணிக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் சம்பளத்தை, 90 லட்சம் ரூபாயில் இருந்து, 80 லட்சம் ரூபாயாக நிறுவனம் குறைத்தது சரவணனுக்கு தெரியவந்தது. அவர் சம்பள ரசீதை சரிபார்த்த போது, 31 நாட்கள் வேலை செய்து இருந்தாலும், 28 நாட்கள் மட்டுமே வேலை செய்ததாக குறிப்பிட்டு இருந்ததும் தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், அனிமேஷ் குமார், உத்கர்ஷ் சின்ஹா, பவனிடம் சென்று கேட்ட போது, இன்னும் அதிகமாக வேலை செய்தால் 90 லட்சம் ரூபாய் சம்பளம்; போனஸ் தருவதாக கூறினர். இதை நம்பி, சரவணனும் கூடுதல் நேரம் வேலை பார்த்துள்ளார்.
ஆனாலும், கூறியபடி நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை. அங்கு வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் சிலரிடம் சரவணன் விசாரித்த போது, வருமான வரி கட்டுவதை தவிர்க்க ஊழியர்கள் சம்பளத்தை குறைத்து கணக்கு காண்பித்து ஏமாற்றுவது தெரிந்தது.
கோபம் அடைந்த சரவணன், அனிமேஷ் குமார், உத்கர்ஷ் சின்ஹா, பவன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மூன்று பேர் மீதும், போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

