திடுக்கிடும் குற்றச்சாட்டு கூறிய கெஜ்ரிவால் மீது வழக்கு; ஹரியானா அரசு அறிவிப்பு
திடுக்கிடும் குற்றச்சாட்டு கூறிய கெஜ்ரிவால் மீது வழக்கு; ஹரியானா அரசு அறிவிப்பு
UPDATED : ஜன 29, 2025 08:06 PM
ADDED : ஜன 29, 2025 05:05 PM

சண்டிகர்: யமுனை நதியில் விஷம் கலந்ததாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஹரியானா அரசு வழக்குப் பதிவு செய்யும் என்று மாநில அமைச்சர் விபுல் கோயல் கூறினார்.
ஹரியானாவில் உள்ள பா.ஜ., அரசு யமுனை நீரில் விஷம் கலந்ததாக டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் அவ்வாறு கூறியதன் மூலம் ஹரியானா மற்றும் டில்லி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளார்.
கெஜ்ரிவால்,மேலும் நீர் பயங்கரவாதம் என்று குற்றம் கூறி, தேர்தல் ஆணையம் மற்றும் டில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு கடிதம் எழுதினார். பா.ஜ., மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தயிருந்தார். அதற்கு பதிலாக, தேர்தல் ஆணையம் இன்று இரவு 8 மணிக்குள் தனது கூற்றுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் கெஜ்ரிவால் மீது ஹரியானா அரசு வழக்கு பதிவு செய்யும் என்று மாநில அமைச்சர் விபுல் கோயல் கூறினார்.
விபுல் கோயல் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. ஹரியானா அரசு அவரை விடாது.
மாநில அரசு புகாரை அனுப்பியுள்ளது, மேலும் பேரிடர் மேலாண்மை பிரிவுகளின் கீழ் சோனிபட்டில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (சிஜேஎம்) வழக்குத் தொடரப்படும்.
இவ்வாறு விபல் கோயல் கூறினார்.
ஹரியானா கோர்ட் சம்மன்
யமுனை நதியில் விஷம் கலக்க முயற்சி என்று கூறிய கருத்து தொடர்பாக, ஹரியானா அரசு கெஜ்ரிவால் மீது, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து,பிப்ரவரி 17 ஆம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஹரியானா கோர்ட் இன்று சம்மன் அனுப்பியுள்ளது
.அவர் அவ்வாறு செய்யத் தவறினால், சட்ட விதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

