வகுப்பறை கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு
வகுப்பறை கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு
ADDED : ஏப் 30, 2025 10:19 PM

புதுடில்லி: ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் 2,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் 2015 முதல் 2025 பிப்., வரை 10 ஆண்டுகள் ஆம் ஆத்மி ஆட்சி நடந்தது.
கடந்த ஆம் ஆத்மி அரசில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கல்வித் துறையையும் கவனித்தார். பொதுப் பணித்துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்தார்.
இவர்கள் காலத்தில் டில்லி அரசுப் பள்ளிகளில் 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில் 2,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஊழல் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வர் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா, பொதுப் பணித்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும், அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பறை 24.86 லட்சம் என்ற மதிப்பீட்டில் 12,748 வகுப்பறைகள் கட்டியுள்ளனர்.
இது வழக்கமான செலவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம். மேலும், ஆம் ஆத்மி கட்சியுடன் நெருக்கமாக உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து, சட்டப் பிரிவு 17-ஏ,யின் கீழ் தேவையான அனுமதியைப் பெற்ற பிறகே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.