ஓட்டு இயந்திரம் குறித்து அவதுாறு ஒருவர் மீது வழக்கு
ஓட்டு இயந்திரம் குறித்து அவதுாறு ஒருவர் மீது வழக்கு
ADDED : டிச 02, 2024 02:12 AM
புதுடில்லி: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை என்னால் முடக்க முடியும்' என கூறியவர் மீது, தேர்தல் கமிஷன் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் சையது சுஜா என்பவர் ஓட்டு இயந்திரம் குறித்து பேசும் வீடியோ பலரால் பகிரப்பட்டது.
அதில், 'மஹாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் அலைவரிசையை பிரித்து, என்னால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை முடக்க முடியும்; அதிலுள்ள தகவல்களை மாற்ற முடியும்' என கூறியிருந்தார்.
இந்த தகவல் மஹாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு வந்தது. அவர், 'வீடியோவில் கூறியுள்ள தகவல்கள் அனைத்தும் தவறானவை; அடிப்படை ஆதாரமற்றவை' என, கூறினார்.
மேலும், தவறான தகவலை வெளியிட்டதற்காக சையது சுஜா மீது மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், இதே போன்ற தகவலை 2019ல் சையது சுஜா வெளியிட்டுஇருப்பதும், அதற்காக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதும் தெரிந்தது.
வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்த அவதுாறு தகவலை அவர் வெளியிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.