ADDED : ஜன 28, 2025 02:11 AM
கோல்கட்டா, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி கிழக்காசிய நாடான, தைவானின் தைபே நகரில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இது தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை.
இந்நிலையில், சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாள் கடந்த 23ல் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., - எம்.பி., யுமான ராகுல் தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், 1945, ஆக., 18ம் தேதி நேதாஜி உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.
நேதாஜி உயிரிழந்தது குறித்து, எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், ராகுல் எப்படி தேதியை உறுதி செய்தார் என, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நேதாஜி மரணம் தொடர்பாக பொய்யான தகவலை பரப்புவதாக ராகுல் மீது, மேற்கு வங்க மாநிலம் தெற்கு கோல்கட்டாவின் பவனிபூர் போலீஸ் ஸ்டேஷனில் அகில பாரதிய ஹிந்து மகாசபா அமைப்பினர் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.

