பார்முலா கார் பந்தயம் நடத்த ரூ.45 கோடி : ராமராவ் மீது வழக்கு
பார்முலா கார் பந்தயம் நடத்த ரூ.45 கோடி : ராமராவ் மீது வழக்கு
ADDED : டிச 19, 2024 07:42 PM

ஐதராபாத்: ஐதராபாத்தில் பார்முலா கார் பந்தயம் நடத்த ரூ.45 கோடி பணம் கொடுத்ததாக பி.ஆர்.எஸ்., கட்சி தலைவர் ராமராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ராமராவ், பிஆர்எஸ் ஆட்சியின் போது நகராட்சி நிர்வாக அமைச்சராக இருந்தார். அப்போது ஐதராபாத்தில் முதல் பார்முலா கார் பந்தயம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில் திட்டமிடப்பட்ட போட்டி, டிசம்பர் 2023ல் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்யப்பட்டது.
பார்முலா கார் பந்தயத்தை நடத்துவதற்கு 45 கோடி ரூபாய் பணம் செலுத்தியதாகவும், மூத்த அதிகாரி ஒருவரால் முறையான அங்கீகாரம் இல்லாமல் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முனிசிபல் நிர்வாகத் துறை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு வலியுறுத்தியது.
மேலும் தெலுங்கானா அரசு இந்த வழக்கைத் தொடர நவம்பர் மாதம் முறைப்படி கவர்னரிடம் அனுமதி கோரியது. அதை தொடர்ந்து,55 கோடி பணம் மற்றும் அங்கீகரிக்கப்படாத ஒப்பந்தத்தை காரணம் காட்டி, வழக்கு பதிவு செய்ய தெலங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா அனுமதி வழங்கினார்.
அவர் அனுமதி வழங்கியதை அடுத்து சில நாட்களுக்குப் பிறகு இன்று ஊழல் தடுப்புப் பிரிவு ராமராவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமராவ், இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன். காங்கிரஸ் அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என்றார்.