போலி மதிப்பெண் சான்றிதழ்; பல்கலை வேந்தர் மீது வழக்கு
போலி மதிப்பெண் சான்றிதழ்; பல்கலை வேந்தர் மீது வழக்கு
ADDED : மார் 20, 2025 03:51 AM

பெரோசாபாத்: உத்தர பிரதேசத்தில், மாணவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கிய தனியார் பல்கலை வேந்தர் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பெரோசாபாத் மாவட்டத்தின் புலாந்தஷர் பகுதியைச் சேர்ந்தவர் திபான்சு கிரி. இவர், அம்மாநிலத்தில் உள்ள ஜே.எஸ்., என்ற தனியார் பல்கலையில் பி.எஸ்சி., விவசாய பட்டப்படிப்பில், சமீபத்தில் தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து, பல்கலை சார்பில் இவருக்கு மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதைப் பார்த்த திபான்சு கிரிக்கு, சந்தேகம் எழுந்தது.
இதேபோல், அவருடன் படித்த ஐந்து மாணவர்களுக்கும் பல்கலை அளித்த மதிப்பெண் சான்றிதழில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, பல்கலைக்கு மதிப்பெண் சான்றிதழுடன் நேற்று முன்தினம் சென்று விசாரித்தனர். எனினும், பல்கலை நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால், அவர்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, திபான்சு கிரி உட்பட ஆறு மாணவர்களும் இணைந்து பல்கலை நிர்வாகம் மீது போலீசில் புகார் அளித்தனர். இப்புகாரின்படி, போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜே.எஸ்., பல்கலை வேந்தர் சுகேஷ் யாதவ், அப்பல்கலையின் இயக்குநர் கவுரவ் யாதவ், அவரது உதவியாளர் யாதவ், விவசாய துறைத்தலைவர் உமேஷ் மிஸ்ரா, பல்கலை பதிவாளர் நந்தன் மிஸ்ரா ஆகிய ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இந்த பல்கலை மீது போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.