'நீட்' தேர்வில் போலி சான்றிதழ் 11 பேர் மீது உ.பி.,யில் வழக்கு
'நீட்' தேர்வில் போலி சான்றிதழ் 11 பேர் மீது உ.பி.,யில் வழக்கு
ADDED : செப் 07, 2025 08:40 AM
பாலியா : உத்தர பிரதேசத்தில், போலி சான்றிதழ்களை பயன்படுத்தி, 'நீட்' தேர்வு கவுன்சிலிங்கில் பங்கேற்ற 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உ.பி.,யில், எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' கவுன்சிலிங் சமீபத்தில் நடந்தது. இதில் பாலியா மாவட்டத்தில் இருந்து கவுன்சிலிங்கில் பங்கேற்ற சிலரது சான்றிதழ்களில் சந்தேகம் இருப்பதாக மருத்துவகல்வி மற்றும் பயிற்சி துறை இயக்குநர் தெரிவித்ததை அடுத்து, கலெக்டர் மங்கலா பிரசாத் சிங் சந்தேக நபர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
கூடுதல் கலெக்டர் தலைமையிலான நான்கு உறுப்பினர் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நான்கு மாணவர்கள் தாக்கல் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் என்பதற்கான சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 11 மாணவர்கள் இதுபோல் போலி சான்றிதழ் அளித்து நீட் தேர்வு கவுன்சிலிங்கில் பங்கேற்றது தெரியவந்தது.
இதுகுறித்து தாசில்தார் சதார் பிரசாத் சிங் அளித்த புகாரின்படி விவேக் தாகூர், காயத்ரி குப்தா, சுமித் குமார் ராய், அசுதோஷ் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற மாணவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.