ADDED : மே 04, 2024 11:00 AM

ஐதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது, காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால், காங்கிரஸ், பா.ஜ., பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் சார்பில் ராகுல், கார்கேவும், பாஜ., சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மே 1ம் தேதி தெலுங்கானாவில் நடந்த ‛ரோடு ஷோ'வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்தப் பேரணியின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், குழந்தைகளை பங்கெடுக்க வைத்ததாகவும் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் அமித்ஷா உள்ளிட்ட 5 பேர் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.