முதல்வர் சித்தராமையா மீது 17 பிரிவுகளில் வழக்கு பதிவு 'முடா' முறைகேட்டில் 'ஏ 1' ஆக சேர்ப்பு
முதல்வர் சித்தராமையா மீது 17 பிரிவுகளில் வழக்கு பதிவு 'முடா' முறைகேட்டில் 'ஏ 1' ஆக சேர்ப்பு
ADDED : செப் 28, 2024 02:02 AM

பெங்களூரு:'முடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார், 17 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர், 'ஏ 1' எனும் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
கர்நாடகாவில் நடக்கும் காங்., ஆட்சியின் முதல்வர் சித்தராமையா, 76. மைசூரின் புறநகர் பகுதியில், இவரது மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை, 'முடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் லே - அவுட் அமைக்க கையகப்படுத்தியது.
இதற்கு பதிலாக மைசூரு நகரின் மையப் பகுதியான விஜயநகரில் 14 வீட்டு மனைகள், 'முடா' சார்பில் வழங்கப்பட்டன.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவிக்கு வீட்டு மனைகள் வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, மைசூருரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவர், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 25ம் தேதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தா போலீசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, 'முடா' முறைகேடு தொடர்பாக நேற்று மதியம் 2:30 மணிக்கு, லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் வழக்கு பதிவு செய்தார்.
வழக்கில், 'ஏ 1' சித்தராமையா, 'ஏ 2' பார்வதி, 'ஏ 3' சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, 'ஏ 4' நிலத்தை விற்ற தேவராஜ், 'ஏ 5' பிறர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சி.ஆர்.பி.சி., மற்றும் பி.என்.எஸ்., சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, அரசு ஊழியர் சட்டத்தை மீறுதல், நேர்மையற்ற முறையில் சொத்து அபகரித்தல், மோசடி செய்யும் நோக்கத்தில் ஆவணங்களை போலியாக உருவாக்குதல் உட்பட 17 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்று நாள் சுற்றுப்பயணமாக மைசூருக்கு நேற்று காலை சித்தராமையா சென்றார். விமான நிலையத்தில், சித்தராமையா அளித்த பேட்டியில், 'என்னை ராஜினாமா செய்ய சொல்லி கேட்கும் தகுதி, பா.ஜ.,வினருக்கு இல்லை. அவர்கள் என்னை கண்டு பயப்படுகின்றனர். அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்வது இதுவே முதல்முறை. எக்காரணம் கொண்டும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன்.
''கோத்ரா கலவரத்திற்கு பொறுப்பு ஏற்று, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி ராஜினாமா செய்தாரா? சட்டவிரோத நிலம் ஒதுக்கீடு செய்ததில், மத்திய அமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்தாரா? நான் சட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன்,'' என்றார்.
ஸ்நேகமயி கிருஷ்ணா கூறுகையில், 'இது எனக்கு கிடைத்த முதல் வெற்றி. சித்தராமையா போன்ற ஊழல்வாதிகளை தடுக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளேன். நியாயம் கிடைக்கும் வரை, என் போராட்டம் ஓயாது,'' என்றார்.