பா.ஜ., அரசின் முன்னாள் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!: கோவிட் உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு
பா.ஜ., அரசின் முன்னாள் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!: கோவிட் உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு
ADDED : டிச 14, 2024 11:12 PM
பெங்களூரு: கொரோனா காலத்தில் நடந்த முறைகேடு குறித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு திடீரென நடவடிக்கையில் இறங்கியதால், எதிர்க்கட்சியான பா.ஜ.,வின் செல்வாக்குமிக்க தலைவர்களின் துாக்கம் தொலைந்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று, கர்நாடகாவை யும் விட்டு வைக்கவில்லை. மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்கள் பரிதவித்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த அன்றைய பா.ஜ., அரசு போராடியது. படிப்படியாக கட்டுக்குள் வந்து, இயல்பு நிலைக்கு திரும்ப, இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆண்டுகளாகின.
விசாரணை
கொரோனா நேரத்தில், முகக்கவசம், கிருமி நாசினி, பாதுகாப்பு கவச உடை, தடுப்பூசி உட்பட, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, அப்போதே காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. தம்கட்சி ஆட்சிக்கு வந்தால், விசாரணை நடத்துவதாகவும் கூறியிருந்தது.
காங்கிரஸ் அரசு அமைந்து, ஒன்றரை ஆண்டு வரை கொரோனா முறைகேடு தொடர்பாக, காங்கிரசார் வாய் திறக்காமல் இருந்தனர். ஆனால் வால்மீகி ஆணைய முறைகேடு, 'முடா' முறைகேடு உள்ளிட்ட புகார்களை வைத்துக் கொண்டு, சித்தராமையா அரசை பா.ஜ., நெருக்கடியில் தள்ளி வருகிறது.
குறிப்பாக 'முடா' முறைகேடு தொடர்பாக, லோக் ஆயுக்தா, அமலாக்கத்துறை விசாரணை பிடியில், முதல்வரின் குடும்பத்தினர் சிக்கித் திணறுகின்றனர். இதனால் கட்சிக்கும் தர்மசங்கடம் ஏற்படுகிறது.
தன்னை சட்டத்தின் பிடியில் சிக்கவைத்த பா.ஜ.,வையும், தர்ம சங்கடத்தில் ஆழ்த்த முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வியூகம் வகுக்கின்றனர். பா.ஜ., மீதான பழைய வழக்குகளை கிளறுகின்றனர்.
கொரோனா முறைகேடு வழக்கை விசாரிப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையமும் விசாரணை நடத்தி, இடைக்கால அறிக்கை அளித்தது. அதில் கொரோனா முறைகேடு பற்றி உரிய விசாரணை நடத்தும்படி சிபாரிசு செய்திருந்தது.
நடுக்கம்
இந்நிலையில், மருத்துவ கல்வித்துறை இயக்குனரக தலைமை கணக்கு அதிகாரி விஷ்ணு பிரசாத், கொரோனா முறைகேடு குறித்து, விதான்சவுதா போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.
அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனாவின்போது உபகரணங்கள் வாங்கியதில், 167 கோடி ரூபாய்க்கும் அதிகமான முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டாக்டர் கிரிஷ், அரசின் உயர் அதிகாரிகள் ரகு, முனிராஜு, மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்த மேனேஜ்மென்ட் சல்யூஷன்ஸ் நிறுவனம், சில மக்கள் பிரதிநிதிகள், சில முன்னாள் அரசு அதிகாரிகள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்த மாநில அரசு எஸ்.ஐ.டி., அமைக்க வாய்ப்புள்ளது.
முதற்கட்டமாக கவச உடை, 'என் 95' முகக்கவசங்கள் வாங்கியது தொடர்பாக மட்டுமே, வழக்குப் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் சிகிச்சை, ஆய்வகம், மருத்துவ இயந்திரங்கள், படுக்கை உட்பட, மற்ற விஷயங்கள் பற்றியும் கட்டம், கட்டமாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையிலான 'பனிப்போரால்' கொரோனா நேரத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய நுாற்றுக்கணக்கான டாக்டர்களும் மருத்துவப் பணியாளர்களும் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளனர்.
முந்தைய அரசின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துணை முதல்வர், உள்துறை அமைச்சர், மருத்துவ கல்வி, சுகாதாரத்துறை அமைச்சர் அடங்கிய, நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கை ஆய்வு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதான் சவுதா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. எந்த ரீதியில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை, அரசு முடிவு செய்யும். இதுவரை எஸ்.ஐ.டி., அமைக்கப்படவில்லை. எனவே விதான் சவுதா போலீஸ் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
தயானந்தா,
போலீஸ் கமிஷனர், பெங்களூரு நகரம்
'முடா', வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடுகளை மூடி மறைக்கவே காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியல் செய்கிறது. நீதிபதி மைக்கேல் குன்ஹா ஆணையம், இன்னும் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இடைக்கால அறிக்கை அளித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து, வழக்குப்பதிவு செய்திருப்பது நகைப்புக்குரியது.
இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. கொரோனா ஊழல் குறித்து, எந்த விசாரணையும் முடியவில்லை. குற்றச்சாட்டும் உறுதியாகவில்லை. காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் செயலுக்கு, மக்கள் பாடம் புகட்டுவர்.
ஜெகதீஷ் ஷெட்டர்,
பா.ஜ., - எம்.பி.,