போதையில் வாகனம் ஓட்டியவர்கள் 1,200 பேர் மீது வழக்கு பதிவு
போதையில் வாகனம் ஓட்டியவர்கள் 1,200 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : மார் 06, 2026 01:38 AM

புதுடில்லி: ஹோலி பண்டிகை நாளான நேற்று முன் தினம், மது குடித்து விட்டு, வாகனங்களை இயக்கியதாக, 1,200 வழக்குகளை டில்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மது அருந்தி விட்டு, வாகனங்களை ஓட்டுவதால், விபத்துகள் நடக்கின்றன என்பதால், அதை தவிர்க்குமாறு, போலீசார் கேட்டுக் கொண்டனர்.
எனினும், நேற்று முன்தினம் நடந்த ஹோலி பண்டிகை நாளில், மது அருந்தி விட்டு, வாகனங்களை இயக்கியதாக, 1,200 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்காக, இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்கள், பல இடங்களில் குடித்து விட்டு வாகனங்களை இயக்குகின்றனரா என்பதை அறிய, சிறப்பு ரோந்து மற்றும் வாகன தணிக்கையை டில்லி போலீசார் மேற்கொண்டனர்.
இதையடுத்து, மத்திய வட்டாரத்தில், 257; வடக்கு வட்டாரத்தில், 256; கிழக்கு வட்டாரத்தில், 208, தெற்கு வட்டாரத்தில், 117 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், புதுடில்லி வட்டாரத்தில் மிகக் குறைவாக, 69 பேரை, குடித்து விட்டு வாகனங்களை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தவிர, பிற போக்குவரத்து விதிகளை மீறியதாக, 3,725 வழக்குகளையும், டில்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கியது; ஒரே இரு சக்கர வாகனத்தில், மூவர் மற்றும் மேற்பட்டோர் பயணித்தது, ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்கியது போன்ற பல குற்றங்கள் அடங்கும்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும் போது,'ஹோலி பண்டிகையை முன்னிட்டு, குடித்து விட்டு, வாகனங்களை இயக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன் படி, இப்போது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, 1,200 பேரிடம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். அவர்கள் மேற்கொண்டு, வாகனங்களை இயக்காத வகையில் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்' என்றனர்.
