நீதிபதி வீட்டில் பண மூட்டை கிடந்த விவகாரம்; பார்லியில் கண்டன தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு ஏற்பாடு
நீதிபதி வீட்டில் பண மூட்டை கிடந்த விவகாரம்; பார்லியில் கண்டன தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு ஏற்பாடு
ADDED : மே 28, 2025 07:20 AM

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் 14ம் தேதி நீதிபதி வர்மாவின் டில்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவின் முதற்கட்ட விசாரணை முடிவில், நீதிபதி வர்மாவை நீதித்துறை பணியில் இருந்து நீக்குதல், அலகாபாத் ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டிற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுப்பு தெரிவித்தார். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டது.
இந்த குழு மே 4ம் தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தது. இந்த விசாரணை அறிக்கை பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தீர்மானம் கொண்டு வரும்.
இவ்வாறு கண்டன தீர்மானம் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது