ADDED : டிச 05, 2024 07:17 AM
பெங்களூரின் ராஜாஜிநகரில் வசித்தவர் பிரியங்கா, 19. இவர் முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். நவம்பர் 19ம் தேதி நள்ளிரவு, தன் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது, பெற்றோருக்கும் தெரியவில்லை.
இதுகுறித்து, ராஜாஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர். பிரியங்காவின் அறையை சோதனையிட்டபோது, அவரது மொபைல் போனின் பின்புற கவரில் வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். கடிதத்தில் தற்கொலைக்கான காரணம் குறித்து பிரியங்காவிவரித்திருந்தார்.
பிரியங்காவின் தந்தை தங்க நகை வியாபாரி. இது அவருடன் கல்லுாரியில் படித்த திகந்த், 19, என்பவருக்கு தெரிந்தது. பிரியங்காவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அவரது நம்பிக்கையை பெற்ற அவர், 'காசினோவில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் சம்பாதிக்கலாம்' என, ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய பிரியங்கா, பெற்றோருக்கு தெரியாமல், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை கொண்டு வந்து, திகந்திடம் கொடுத்தார். பல நாட்களாகியும் நகை திரும்ப கொடுக்கவில்லை. அவரிடம் பல முறை கேட்டும் பதில் இல்லை.
வீட்டுக்கு தெரியாமல் நகையை கொண்டு சென்றது தெரிந்தால், பெற்றோர் கோபமடைவர் என்ற பயத்தில், பிரியங்கா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீசாருக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதால், திகந்த் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.