இந்தியாவில் தயாரான 'கேசியோ' வாட்ச் விற்பனை துவக்கம்
இந்தியாவில் தயாரான 'கேசியோ' வாட்ச் விற்பனை துவக்கம்
ADDED : ஆக 13, 2025 03:44 AM

புதுடில்லி: ஜப்பானைச் சேர்ந்த பிரபல கேசியோ நிறுவனம், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதன் மூன்று கைக்கடிகாரங்களின் விற்பனையை இங்கு துவக்கி உள்ளது. அத்துடன், மேலும் 28 மாடல்கள், முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் தயாரான தங்கள் கைக்கடிகார மாடல்கள் விற்பனையை அதிகரிக்க, வரும் பண்டிகை காலத்தில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கேசியோ நிறுவனம், கைக்கடிகாரங்களில் மட்டுமின்றி கால்குலேட்டர்கள், எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் போன்ற பல்வேறு தயாரிப்புகளுக்காகவும் உலகளவில் பிரபலமானது.
இந்நிறுவனம் தான் உலகின் முதல் காம்பாக்ட் எலக்ட்ரானிக் கால்குலேட்டரை, 1957ல் அறிமுகம் செய்தது. இதேபோல் 1974ல், உலகின் முதல் டிஜிட்டல் கைக்கடிகாரத்தையும் அறிமுகம் செய்து, டிஜிட்டல் கடிகாரங்களுக்கான ஒரு புதிய சகாப்தத்தையும் துவக்கியது.
இந்திய சந்தையில், இந்நிறுவனம் 1996ம் ஆண்டு நுழைந்தது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் கடிகாரங்களை உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றின் கூட்டுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடிகாரங்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.