ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்தவர் காங்.,கில் ஐக்கியம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்தவர் காங்.,கில் ஐக்கியம்
ADDED : மார் 12, 2024 11:52 PM

பெங்களூரு : கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே, ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., குமாரசாமி ஆகியோர் நேற்று அதிகாரபூர்வமாக காங்கிரசில் இணைந்தனர்.
உடுப்பி மாவட்டம், குந்தாபூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே; தொழில் ரீதியாக வழக்கறிஞர். கடந்த 1994ல் ஜனதா தளம் சார்பில் பிரம்மாவர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். 1999, 2004ல் பிரம்மாவரில் சுயேச்சையாக போட்டியிட்டு, தனது பலத்தை வெளிப்படுத்தினார். அவரின் தொடர் முயற்சியால், 1997ல் உடுப்பி புதிய மாவட்டமாக உருவானது.
அதன்பின், தொகுதி மறுவரையரை செய்த போது, பிரம்மாவர் தொகுதி காணாமல் போனது. இதனால் போட்டியிடாமல் இருந்த அவர், 2012ல் காங்கிரசில் இணைந்தார். 2012ல் உடுப்பி - சிக்கமகளூரு எம்.பி.,யாக இருந்த சதானந்த கவுடா முதல்வராக பொறுப்பேற்றார்.
இதனால் காலியான அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஷோபாவிடம் தோல்வி அடைந்தார்.
இதை தொடர்ந்து அரசியலில் இருந்து விலகினார். கட்சி மீது அதிருப்தி தெரிவித்ததால், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவர் வெளியேறிய பின், கடலோர மாவட்ட பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
பின் பா.ஜ.,வில் இணைந்த அவர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக நியமிக்கப்ட்டார். சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கினார்.
இந்நிலையில், பெங்களூரில் நேற்று அதிகாரபூர்வமாக காங்கிரசில் இணைந்த அவருக்கு, துணை முதல்வர் சிவகுமார், கட்சியின் சால்வை அணிவித்து, கொடியை வழங்கினார். அது போன்று ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., குமாரசாமியும் காங்கிரசில் இணைந்தார்.

