ADDED : பிப் 29, 2024 05:35 AM

பெங்களூரு, : பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, முதல்வர் சித்தராமையாவிடம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
கர்நாடகாவில் 2013ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி காந்தராஜ் தலைமையில் ஆணையம் அமைத்தார். இதற்காக அரசு, 165 கோடி ரூபாய் ஒதுக்கியது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, காந்தராஜ் தலைமையிலான ஆணையம், 2019ல் முதல்வராக இருந்த குமாரசாமியிடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. காந்தராஜ் பதவிக்காலம் முடிந்த பின்னர், ஆணைய தலைவராக முன்னாள் எம்.பி., ஜெயபிரகாஷ் ஹெக்டே பதவி ஏற்றார்.
எதிர்ப்பு
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தது. சித்தராமையா மீண்டும் முதல்வர் ஆனார். கிடப்பில் இருந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, அரசிடம் தாக்கல் செய்ய, ஆணையத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கும், ஆணைய தலைவராக இருந்த, ஜெயபிரகாஷ் ஹெக்டேயின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் முதல்வர் சித்தராமையாவிடம், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.
சாதகம், பாதகம்
இதுகுறித்து ஜெயபிரகாஷ் ஹெக்டே கூறுயதாவது:
இன்று எனது பதவிக்காலம் முடிகிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை தயாராக உள்ளது. முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. எனக்கு முன்பு ஆணையத்தின் தலைவராக இருந்த, நீதிபதி காந்தராஜ் தாக்கல் செய்த அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கிறோம். அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதா என்று, வெளிப்படையாக கூற முடியாது.
முதல்வரிடம் தாக்கல் செய்த பின்னர், அறிக்கையில் என்ன உள்ளது என்று தெரிய வரும். அதன்பின்னர் சாதக, பாதகம் குறித்து விவாதம் நடக்கட்டும். எந்த ஜாதியினரையும் விடவில்லை. அனைவரும் சேர்ந்து உள்ளோம். இந்த அறிக்கை தயாரிக்கும் போது, எனக்கு எந்த நெருக்கடியும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

