சிறையில் ஜாதி பாகுபாடு: தீர்வு காண மத்திய அரசு உத்தரவு
சிறையில் ஜாதி பாகுபாடு: தீர்வு காண மத்திய அரசு உத்தரவு
ADDED : ஜன 02, 2025 03:45 AM

புதுடில்லி: சிறையில் கைதிகள் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்க தீர்வு காணும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து சிறை விதிகளையும் மூன்று மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என்றும், கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:
சிறை கைதிகளின் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த பிரச்னையை தீர்க்க, மாதிரி சிறை கையேடு - 2016, மாதிரி சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம் - 2023 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, சிறையில் கைதிகள் ஜாதி அடிப்படையில் பாகுபாடு, வகைப்பாடு செய்யப்படுவதில்லை என்பதை சிறை நிர்வாகத்தினர் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஜாதி அடிப்படையில் சிறை கைதிகளுக்கு வேலைகள் வழங்கக் கூடாது. சிறையில் உள்ள சாக்கடை அல்லது செப்டிங் டேங்க்கை சுத்தம் செய்ய கைதிகளை அனுமதிக்கக் கூடாது. இந்த உத்தரவுகளை சிறை நிர்வாகத்தினர் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

