ராணுவத்திலும் ஜாதி ஆதிக்கம்: ராகுல் பேச்சால் சர்ச்சை
ராணுவத்திலும் ஜாதி ஆதிக்கம்: ராகுல் பேச்சால் சர்ச்சை
ADDED : நவ 04, 2025 10:35 PM

பாட்னா: '' நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால்( உயர்ஜாதியினரால்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் சட்டசபைக்கு நாளை மறுநாள் மற்றும் 11ம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று( நவ.,04) மாலையுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் குடும்பா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டில் 10 சதவீதம் அளவில் இருக்கும் மக்களால்( உயர்ஜாதியினர்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. 90 சதவீதம் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், ஆதிவாசி சமூகங்களை சேர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் அதிகாரம் மற்றும் வளங்களில் இருந்து விடுபட்டுள்ளனர்.
அனைத்து வளங்களும் 10 சதவீதம் பேருக்கு செல்கிறது. அனைத்து வேலைகளும் அவர்களுக்கே செல்கிறது. நீதித்துறையை பார்த்தால், அவர்களே கட்டுப்படுத்துகின்றனர். ராணுவத்திலும் அதுதான் நடக்கிறது. 90 சதவீத மக்கள் எங்களையும் பார்க்க முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார். ராகுலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாஜ செய்தித்தொடர்பாளர் சுரேஷ் நகுனா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராகுல், தற்போது ஆயுதப்படையிலும் ஜாதியை தேடி வருகிறார். 10 சதவீதம் பேர் அதைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் கூறுகிறார். பிரதமர் மோடி மீதான வெறுப்பில் அவர் ஏற்கனவே இந்தியாவை வெறுப்பதற்கான எல்லையை தாண்டிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

