ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் தாக்கல்? 16ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் தாக்கல்? 16ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்
ADDED : ஜன 11, 2025 04:51 AM

பெங்களூரு: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து, வரும் 16ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்,'' என, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கட்கி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மாநிலத்தில் 2015ம் ஆ-ண்டு, காங்கிரஸ் ஆட்சியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
லிங்காயத்கள், ஒக்கலிகர்கள் உள்ளிட்ட அரசியல் செல்வாக்கு பெற்ற சமூகங்களுக்கு சாதகமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், குருபர், முஸ்லிம்கள் போன்றோரின் மக்கள்தொகை, குறைந்த எண்ணிக்கையில் காட்டப்பட்டு உள்ளதாகவும் விமர்சனம் எழுந்தது.
ஜாதிவாரி கணக்கெடுப்பில் குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளதால் கல்வி, வேலை வாய்ப்பில் ஒதுக்கப்படும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட கூடும் என பல சமூகத்தினரும் ஆதங்கம் அடைந்தனர்.
இதன்பின் ஜாதிவாரி கணக்கெடுப்பு, கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகாவில் நடத்தப்படவில்லை. தற்போது, இப்பிரச்னைக்கு ஒரு விடிவு காலம் வந்துள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து, பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சிவராஜ் தங்கட்கி கூறுகையில், ''முதல்வர் சித்தராமையா தலைமையில் வரும் 16ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படும்,'' என்றார்.
இதுகுறித்து ஒக்கலிக சங்க தலைவர் கெஞ்சப்பா கவுடா அளித்த பேட்டி:
ஒக்கலிகர் சமுதாயத்தினருக்கு எதிராக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், நிச்சயம் அரசு கவிழும். கடைசியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வீடு வீடாக சென்று ஒழுங்காக நடத்தப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறு நடந்தது. அப்போது, அரசு தரப்பில் 5 கோடியே 98 லட்சம் மக்கள் தொகை உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மாநிலத்தில் 7 கோடி மக்கள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
ஒக்கலிகர் சங்க அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் கூட்டம் நாளை (12 ம் தேதி) நடக்க உள்ளது. ஆதி சுஞ்சனகிரி மடத்தின் ஸ்ரீ நிர்மலானந்தநாத சுவாமிகள் கலந்து கொள்ள உள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்படும். தேவகவுடா, குமாரசாமி, அசோக், டி.கே.சிவகுமார் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.