தேர்வில் ‘சாட்ஜிபிடி’ செயலி பயன்படுத்தி பிடிபட்ட ஐ.ஐ.டி., மாணவர் தற்கொலை
தேர்வில் ‘சாட்ஜிபிடி’ செயலி பயன்படுத்தி பிடிபட்ட ஐ.ஐ.டி., மாணவர் தற்கொலை
ADDED : செப் 19, 2026 07:33 PM
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை ஐ.ஐ.டி.,யில், தேர்வின் போது மொபைல் போனில் ‘சாட்ஜிபிடி’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலியில் தேர்வு வினாத்தாளை பதிவேற்றி பதில் எழுத முயன்று பிடிபட்ட இரண்டாம் ஆண்டு பி.டெக்., மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை பவாயில் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் செயல்படுகிறது. இங்கு விடுதி அறையில் நேற்று முன்தினம் பி.டெக்., இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவர்கள் சிலர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
மாணவர் தற்கொலை குறித்து ஐ.ஐ.டி., நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
தற்கொலை செய்து கொண்ட பி.டெக்., இரண்டாம் ஆண்டு மாணவர் தேர்வின்போது மொபைல் போனை பயன்படுத்தி உள்ளார். அதை பேராசிரியர் கண்டுபிடித்தார். தேர்வு வினாத்தாளை ‘சாட்ஜிபிடி’ செயலில் பதிவேற்றி விடைகளை தேடியுள்ளார்.
எனினும், அந்த மாணவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை. அவரை அழைத்து பேராசிரியரும், துறை தலைவரும் அறிவுரை மட்டுமே வழங்கினர். அவரது கல்வி எதிர்காலத்தை பாதிக்கும் அளவுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
