UPDATED : மார் 21, 2025 10:00 AM
ADDED : மார் 21, 2025 03:39 AM

பெங்களூரு : ~உலக தண்ணீர் தினத்தை சிறப்பாக கொண்டாடவும், பொது மக்களிடம் தண்ணீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெங்களூருக்கு காவிரி நீர் தான் ஆதாரம் என்பதால் காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பெங்களூரு மல்லேஸ்வரம் சாங்கே ஏரியில் இன்று காவிரி ஆரத்தி கோலாகலமாக நடத்தப்படுகிறது.
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின் முக்கியத்துவம் குறித்து பெங்களூரு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இன்று, 'காவிரி ஆரத்தி' நடத்த திட்டமிட்டு, பணிகளை சிறப்பாக செய்து உள்ளது.
சிவகுமார் ஆய்வு
இந்நிலையில், காவிரி ஆரத்தி நடக்கும் சாங்கே ஏரிப்பகுதியை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று பார்வையிட்டார். விழா ஏற்பாடுகள் குறித்து, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் விளக்கினார். இதை கேட்ட துணை முதல்வர், அவரை பாராட்டினார்.
பின் சிவகுமார் அளித்த பேட்டி:
மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம். இம்முறை, இந்நாளை சிறப்பாக கொண்டாடவும், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே காவிரி ஆரத்தி நடத்தப்படுகிறது.
பெங்களூருக்கு காவிரி நீர் தான் நீராதாரம். காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தலக்காவிரியில் இன்று உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களால் பூஜை நடத்தப்படும். அதன்பின், இங்கு மாலை 5:00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கும். இரவு 7:00 மணிக்கு காவிரி ஆரத்தி நடக்கும்.
பெங்களூரு வரலாற்றில் காவிரி ஆரத்தி நடந்ததில்லை. பெங்களூரில், இனி குடிநீர் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக, இவ்விழா நடத்தப்படுகிறது. வரும் நாட்களில் மாநிலத்தில் அதிக மழை பெய்ய பிரார்த்தனை செய்து கொள்வோம்.
விழிப்புணர்வு
'நவு' காவிரி 5வது குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. பொது மக்களிடம் குடிநீர் குறித்து ஒரு மாதத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வாகனங்கள் சுத்தம் செய்ய, குடிநீர் பயன்படுத்துவதால், 20 சதவீதம் குடிநீர் வீணாகிறது.
கே.ஆர்.எஸ்., அணையில் காவிரி ஆரத்தி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். அதை செயல்படுத்துவது குறித்து காசிக்கு சென்று ஆய்வு செய்ய அமைச்சர்கள், அதிகாரிகளையும் அனுப்பியிருந்தேன்.
காவிரி ஆரத்திக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, ஏரிக்கு எந்தவித தீங்கும் ஏற்படாத வகையில் விழா நடத்தப்படும். காவிரி ஆரத்தியில் பொது மக்கள் பங்கேற்க வேண்டும். உங்களின் கருத்துகளை எங்களுக்கு தெரிவிக்கலாம்.
இலவசம்
மாலை 5:30 மணிக்கு ரகு தீக் ஷித் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கும். 50 நிமிடம் காவிரி ஆரத்தி நடத்தப்படும். தீப அலங்காரமும் செய்யப்பட உள்ளது. இதற்கு பாஸ், கட்டணம் என எதுவும் இல்லை. இலவசமாக வந்து பார்த்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
* தலக்காவிரி சிறப்பு பூஜை
நாளை (இன்று) ஹெலிகாப்டர் மூலம் துணை முதல்வர் சிவகுமார், தலக்காவிரிக்கு சென்று, உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களுடன் காவிரி சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார். பின், மாலையில் நடக்கும் காவிரி ஆரத்தியின் போது, ஹெலிகாப்டர் மூலம் தலக்காவிரி நீர், சாங்கே ஏரியில் தெளிக்கப்படுகிறது.
மாலையில் மல்லேஸ்வரத்தில் உள்ள ஓம் கங்கம்மா தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. காசியில் இருந்து மூத்த புரோகிதர்களும், கர்நாடகாவின் மூத்த புரோகிதர்களும் இணைந்து ஆரத்தி நடத்த உள்ளனர்.
'தண்ணீரை சேமிப்போம்' என்று லட்சக்கணக்கானோர் உறுதிமொழி எடுத்து கொள்வதன் மூலம், 'கின்னஸ் சாதனை' படைக்க உள்ளனர்.
* நிபந்தனையுடன் ஐகோர்ட் அனுமதி
காவிரி ஆரத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் கீதா மிஸ்ரா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இம்மனு, தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மோகன் வாதிடுகையில், ''சாங்கே ஏரியில், காவிரி ஆரத்தி நடத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட ஏரி அருகில், தற்காலிகமாக கடைகள் அமையும் வாய்ப்பு உள்ளது. பல்லுயிர் உயிரினங்கள், பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்,'' என்றார்.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரன் ஷெட்டி வாதிடுகையில், ''குடிநீரின் முக்கியத்துவம், விழிப்புணர்வு ஏற்படுத்துவவே, சட்டத்துக்கு உட்பட்டு தான் நடக்கிறது,'' என்றார். பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வக்கீல் உதய் ஹொல்லா வாதிடுகையில், ''இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. அதற்கான ஆதரங்களும் உள்ளன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, காவிரி ஆரத்தி நடத்தப்படுகிறது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
சட்டம் - ஒழுங்கு பாதிக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். நீர் நிலைகளில் விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்நிகழ்வு கலாசார நிகழ்வாக இருக்கும் என்றும்; உணவு கடைகள் அமைக்க அனுமதி இல்லை என்றும் அரசும், அதிகாரிகளும் அளித்த உறுதி மொழியை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. ஆரத்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.