ADDED : ஜன 17, 2025 11:12 PM

பெங்களூரு: கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, எக்ஸ்பிரஸ் பைப்லைன் பொருத்தி, பெங்களூரு புறநகர் பகுதிகளுக்கு, காவிரி குடிநீர் வினியோகிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இது குறித்து, நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சமீபத்தில் காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தை, மாநில அரசு துவக்கியது. இந்த திட்டத்தின் கீழ், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து எக்ஸ்பிரஸ் பைப்லைன் பொருத்தப்படும். இங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்து, பெங்களூரு புகநகர் பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும்.
திட்டம் முடிவடைந்தால், கெங்கேரி, சர்ஜாபூர் ஆனேக்கல், நெலமங்களாவின் சில பகுதிகள், தேவனஹள்ளி, ஹொஸ்கோட்டில் வசிக்கும் 50 லட்சம் முதல் 60 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தற்போது இப்பகுதி மக்கள் போர்வெல் குடிநீர், டேங்கர் தண்ணீர் பயன்படுத்துகின்றனர். இவர்கள் காவிரி நீருக்காக காத்திருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கடுமையான வறட்சி நிலவியது.
போர்வெல்லில் தண்ணீர் வற்றியது. மக்கள் டேங்கர் நீரையே நம்ப வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால், பெங்களூரின் இமேஜுக்கு களங்கம் ஏற்பட்டது. இதை மனதில் கொண்டு, இப்பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வழங்க, எக்ஸ்பிரஸ் பைப்லைன் பொருத்த திட்டம் வகுக்கப்பட்டது.
இது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. மக்களின் வேண்டுகோள் நிறைவேறும்.
அடுத்த 20 ஆண்டுகளில், பெங்களூரு மேலும் வளர்ச்சி அடையும். மக்கள் தொகை அதிகரித்து, தண்ணீர் தேவை அதிகமாகும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.