ADDED : டிச 18, 2024 10:26 PM
பெங்களூரு; பெங்களூரு காவிரி எம்போரியத்தில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
சந்தன மரங்களை வாங்கவும், விற்பனை செய்யவும், வாகனங்களில் கொண்டு செல்லவும் கட்டுப்பாடு உள்ளது. இதையும் மீறி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கர்நாடக மாநில அரசின் கைவினை மேம்பாட்டுக்கழகத்தின் விற்பனை நிலையமான, பெங்களூரு காவிரி எம்போரியத்தில் வனத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
விதிகளை மீறி 32 கிலோ சந்தன கட்டைகள், 7.5 கிலோ சந்தன எண்ணெய், 12 கிலோ சந்தனத் துாள் அங்கு இருந்தது. அவற்றை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வனத்துறை அதிகாரி கூறுகையில், ''காவிரி எம்போரியத்தின் மேலாளர், வனத்துறை விதிகளை மீறி, ஆறு மாதங்களுக்கு முன்பு மேற்கண்ட பொருட்களை கொண்டு வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது வரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை,'' என்றார்.

