12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்கும் சூழல் சிக்கனமாக பயன்படுத்த காவிரி நீர்ப்பாசன அதிகாரி எச்சரிக்கை
12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்கும் சூழல் சிக்கனமாக பயன்படுத்த காவிரி நீர்ப்பாசன அதிகாரி எச்சரிக்கை
ADDED : பிப் 26, 2024 07:33 AM
பெங்களூரு: ''இருப்புள்ள தண்ணீரை, சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால், அடுத்த நான்கு மாதங்கள் வரை, 10 - 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்,'' என காவிரி நீர்ப்பாசன காவிரி தொழில்நுட்ப கமிட்டி ஒருங்கிணைப்பாளர் லட்சுமண் எச்சரித்தார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
மழை பற்றாக்குறையால், காவிரி நீர்ப்பாசனத்துக்கு உட்பட்ட, நான்கு அணைகளில் நீர்மட்டம் 60 சதவீதம் குறைந்துள்ளது. 115 டி.எம்.சி., நீர்ப்பிடிப்பு திறன் கொண்ட அணைகளில், 70 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே நிரம்பியது. அதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுபடி, தமிழகத்துக்கு 40 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கே.ஆர்.எஸ்., அணையில் இருப்புள்ள 16.32 டி.எம்.சி., நீரை வைத்து, வரும் மழைக்காலம் வரை சமாளிக்க வேண்டும். இதில் 14 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே, பயன்படுத்த தகுதியானதாகும். பெங்களூரு, மைசூரு உட்பட மற்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, ஒரு லிட்டர் தண்ணீரை திறந்து விட்டால், அது 100 கி.மீ., க்கு பாய்ந்து வருவதற்குள், முக்கால் பாக தண்ணீர் ஆவியாகிவிடுகிறது. கால் லிட்டர் தண்ணீர் மட்டுமே வந்தடைகிறது.
பெங்களூருக்கு அடுத்த நான்கு மாதங்கள் வரை, எட்டு முதல் ஒன்பது டி.எம்.சி.,; மைசூரு உட்பட மற்ற இடங்களுக்கு ஐந்து முதல் ஆறு டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படும். கே.ஆர்.எஸ்., அணையில் உள்ள தண்ணீரை முழுவதுமாக எடுக்க முடியாது. அணையின் ஈரத்தன்மையை காப்பாற்ற, நீரை தக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் அணை விரிசல் விடும் அபாயம் உள்ளது.
ஜூன் இறுதியில் மழைக்காலம் ஆரம்பமாகும். அதுவரை தண்ணீரை மிதமாக பயன்படுத்த வேண்டும். இதை தவிர வேறு வழி இல்லை.
தண்ணீரை இறக்குமதி செய்து கொள்ள முடியாது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால், அடுத்த நான்கு மாதங்கள், 10 - 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கும் சூழ்நிலை உருவாகும்.
கடந்த 2022 - 23ல், காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், நல்ல மழை பெய்ததால், 700 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்தது. ஆனால் நம்மால் 300 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே சேமிக்க முடிந்தது. 400 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணானது. இந்த தண்ணீரை தமிழகத்தாலும் கூட, தக்க வைக்க முடியவில்லை.
காவிரி நீர்ப்பாசன அணைகளின் நீர் சேகரிப்பு திறன், 115 டி.எம்.சி., மட்டுமே. எனவே மேகதாது அருகில் 60 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்கும் அணை கட்ட அனுமதி அளிக்கும்படி, நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

