'கங்கையை சந்திக்கும் காவிரி' : டில்லியில் கலை நிகழ்ச்சி துவக்கம்
'கங்கையை சந்திக்கும் காவிரி' : டில்லியில் கலை நிகழ்ச்சி துவக்கம்
ADDED : நவ 03, 2024 12:29 AM
புதுடில்லி: மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'கங்கையை சந்திக்கும் காவிரி' என்ற தலைப்பிலான கலை நிகழ்ச்சி களை டில்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று துவக்கி வைத்தார்.
மத்திய கலாசார அமைச்சகம், அமிர்த் பரம்பரா அமைப்பினருடன் இணைந்து 'கங்கையை சந்திக்கும் காவிரி' என்ற பெயரில் நேற்று டில்லியில் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
நவ., 5 வரை, கடமை பாதையில் நடக்க உள்ள இந்நிகழ்ச்சியினை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று துவக்கி வைத்தார்.
'கங்கையை சந்திக்கும் காவிரி' நிகழ்ச்சி, தெற்கு மற்றும் வட மாநில கலைகளை பெருமைப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கர்நாடக வாய்ப்பாட்டு, கேரளாவின் தெய்யம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.
இத்துடன் சென்னை மார்கழி சீசன் மற்றும் சர்தார் வல்லபபாய் படேலின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கலை நிகழ்ச்சி குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ''மத்திய அரசின் இதுபோன்ற முயற்சிகள் நம் கலாசாரத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிக்கும். நம் பாரம்பரியத்தை இன்னும் செழுமைப்படுத்தும்,'' என்றார்.