விஜயதசமிக்குள் காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டம் துவக்கம்
விஜயதசமிக்குள் காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டம் துவக்கம்
ADDED : செப் 24, 2024 07:38 AM

பெங்களூரு: காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டத்தின் இறுதிகட்டப் பணிகளை, துணை முதல்வர் சிவகுமார் ஆய்வு செய்தார். “விஜயதசமிக்குள் துவக்கி வைக்கப்படும்,” என, அவர் உறுதி அளித்துள்ளார்.
பெங்களூரு நகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், புறநகர் பகுதிகளின் 110 கிராமங்கள், பெங்களூரு மாநகராட்சிக்குள் 2007ல் இணைக்கப்பட்டன. அந்த கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்காக, காவிரி 5ம் கட்ட திட்டம் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக, அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதால், ஜெய்கா நிறுவனத்தின் உதவியுடன் 5,550 கோடி ரூபாயில், 2014ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டப் பணிகள், தற்போது முடிக்கப்பட்டுள்ளன.
சுத்திகரிப்பு மையம்
பணிகள் முடிந்த நிலையில், சோதனை முறையில் குழாய்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி நடக்கிறது. இந்நிலையில், துணை முதல்வர் சிவகுமார், நேற்று முடிந்த பணிகளை ஆய்வு செய்தார். இவருக்கு, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் திட்டம் குறித்து, முழுமையாக விளக்கினார்.
முதலில், கெங்கேரி ரயில் உள்ள ராட்சத போர்வெல் குழாய் பணிகளை ஆய்வு செய்தார். பின், கனகபுரா தாலுகா, ஹாரோஹள்ளி சென்று, குழாய்களுக்கு நீர் அனுப்பும் இயந்திரத்தை பார்வையிட்டார். இறுதியாக, மாண்டியா மாவட்டம், மலவள்ளி அடுத்த தொரேகாடனஹள்ளியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.
பின், துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சியுடன், 17 ஆண்டுகளுக்கு முன்பு, 110 கிராமங்கள் இணைக்கப்பட்டன. அந்த கிராம மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காகவே, உறுதிபூண்டேன். இதனால் ஏற்பட்ட பல இடையூறுகளையும் தாண்டி, படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
775 எம்.எல்.டி.,
அடுத்த மூன்று நாட்களில், காவிரி குடிநீர் வினியோகிக்கும் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட உள்ளன. விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, தரத்தை மறந்து விடக் கூடாது. பணிகள் தரமானதாக இருக்க வேண்டும்.
டேங்கரில் தண்ணீர் வினியோகம் செய்வதைத் தவிர்த்து, காவிரி குடிநீர் வழங்குவதே எங்கள் நோக்கம். பெங்களூருக்கு, ஏற்கனவே 1,400 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்துடன், மேலும் 775 எம்.எல்.டி., நீர் வழங்கப்படும்.
காவிரி 5ம் கட்ட திட்டப் பணிகள் முடிந்துள்ளதால், இனி 10 ஆண்டுகளுக்கு பெங்களூரு மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே பெரியது
ஆர்.ஆர்., நகர், பெங்களூரு தெற்கு, கெங்கேரி, ஆனேக்கல், யஷ்வந்த்பூர், பேட்ராயனபுரா, பொம்மனஹள்ளி, மஹாதேவபுரா உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் தாராளமாக கிடைக்கும். இதற்காக, 1.45 லட்சம் மெகா டன் ஸ்டீல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே இது தான் மிக பெரிய குடிநீர் திட்டம்.
விரைவில் கங்கா ஆரத்தி போன்று, காவிரி ஆரத்தி காண்பிக்கும் விழா நடத்தப்படும். 5ம் கட்ட திட்டப் பணிகள் முடிந்துள்ள நிலையில், விஜயதசமிக்குள் துவக்கி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

