அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ., மேல்முறையீடு: வரும் 9ல் விசாரணை
அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ., மேல்முறையீடு: வரும் 9ல் விசாரணை
UPDATED : மார் 02, 2026 02:56 AM
ADDED : மார் 02, 2026 01:29 AM

- டில்லி சிறப்பு நிருபர் -
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை விடுவித்து, விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தொடர்ந்த மேல்முறையீடு மனு, வரும் 9ல் விசாரணைக்கு வருகிறது.
திஹார் சிறை
டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015 - 24 வரை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்தார். அவரது கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, 2015 - 23 வரை துணை முதல்வராக இருந்தார்.
கடந்த 2021ல், ஆம் ஆத்மி ஆட்சியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில், 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, புதிய கொள்கை ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் ஆறு மாதமும், மணீஷ் சிசோடியா இரு ஆண்டுகளும் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
23 பேர் விடுப்பு
இந்த வழக்கை விசாரித்த டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்து, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா உட்பட 23 பேரை, சமீபத்தில் விடுவித்தது.
இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., உடனடியாக மேல்முறையீடு செய்தது. அதில், 'விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் தவறானது. நீதிபதி ஒரு குறுகிய கால விசாரணையை மட்டும் நடத்தி ஆதாரங்களை மேலோட்டமாக பார்த்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன், வரும் 9ல், இந்த மேல்முறையீடு மனு விசாரணைக்கு வருகிறது. ஹோலி விடுமுறைக்கு பின், நீதிமன்றம் திறக்கப்படும் முதல் நாளிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

