ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு தடை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு தடை
ADDED : நவ 20, 2025 12:12 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், 'தமிழக போலீசார் வழக்கை நியாயமாக விசாரிக்கவில்லை. எனவே, விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது.
- டில்லி சிறப்பு நிருபர் -
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, சி.பி.ஐ., விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, ''இந்த வழக்கில் தமிழக காவல் துறையினர் சரியான விசாரணையை மேற்கொள்ளவில்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு பிறகும் ஆவணங்களை சி.பி.ஐ., வசம் போலீசார் ஒப்படைக்கவில்லை. இது அப்பட்டமான நீதிமன்ற அவ மதிப்பு,'' என, வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுாத்ரா, ''இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. கொலை வழக்கில் ஏற்கனவே தமிழக காவல்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டனர். இந்த வழக்கில் சிலர் ஜாமின் பெற்றுள்ளனர்.
''அதையும் தமிழக காவல்துறை தொடர்ந்து விசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்,'' என, கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்திற்குள் நாங்கள் தற்போது செல்ல விரும்பவில்லை. இந்த விவகாரத்தில், 'மெரிட்' அடிப்படையிலான விசாரணையை தான் எதிர்பார்க்கிறோம்.
மேலும், அனைத்து வழக்குகளிலும் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்பதை ஏற்க முடியாது. சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு பெரிய கட்டமைப்பு கிடையாது. அவர்கள் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது நடைமுறை சாத்தியமும் கிடையாது. எதற்கெடுத்தாலும் சி.பி.ஐ., விசாரணை கேட்பது தற்போது ஒரு கலாசாரமாக மாறிவிட்டது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது சரியல்ல.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், சி.பி.ஐ., இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கும் இடைக்கால தடை விதித்தனர்.
அப்போது பேசிய ஆம்ஸ்ட்ராங் சகோதரர் இமானுவேல் தரப்பு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, ''இந்த வழக்கை சி.பி.ஐ., தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தது. அப்படியிருக்கையில், அதை நீங்களே தற்போது மாற்றலாமா?,'' என, குரலை உயர்த்திக் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ''குரலை உயர்த்தி பேசாதீர்கள். நாங்களும் சில நேரங்களில் தவறு செய்ய நேரிடும். நாங்கள் 100 சதவீதம் சரியானவர்கள் கிடையாது.
''எந்த ஒரு விஷயத்தையும் ஆய்வு செய்ததற்கு பிறகுதான் முடிவெடுக்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில், தற்போது இந்த வழக்கை விரிவாக ஆய்வு செய்த பிறகுதான் இந்த இடைக்கால தடையை விதித்திருக்கிறோம்,'' என்றனர்
- டில்லி சிறப்பு நிருபர் -.

