காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு
காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு
ADDED : பிப் 22, 2024 11:57 AM

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது குறித்து 'நான் விவசாயி மகன். பயப்பட மாட்டேன்' என சத்யபால் மாலிக் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராக 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சத்யபால் மாலிக். அவரது பதவி காலத்தில் மின் திட்ட ஒப்பந்தத்துக்காக ரூ.300 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் டில்லியில் உள்ள முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சர்வாதிகாரி
இது தொடர்பாக, சத்யபால் மாலிக் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இருந்த போதிலும், எனது வீடு சர்வாதிகாரிகளின் விசாரணை அமைப்புகள் மூலம் சோதனையிடப்படுகிறது.
விவசாயின் மகன்
எனது ஓட்டுநர் மற்றும் எனது உதவியாளரையும் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகின்றனர். நான் ஒரு விவசாயி மகன், இந்த சோதனைகளுக்கு நான் பயப்பட மாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.