சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கை கல்வியாண்டின் பாதியில் மொழித் தேர்வை மாற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கை கல்வியாண்டின் பாதியில் மொழித் தேர்வை மாற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 26, 2026 08:44 PM

-நமது டில்லி நிருபர்-
தேசிய கல்வி கொள்கையின் கீழ் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் இரு இந்திய மொழிகள் உள்பட மூன்று மொழிகளை படிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ., கொள்கை வகுத்தது. இதை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி பொதுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து கடந்த செப்டம்பர் மாதம் நிவாரணம் வழங்கியிருந்தது. இந்த உத்தரவில் திருத்தம் கோரி, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களில், ஏற்கனவே இரண்டு மொழிகளை தேர்வு செய்தவர்கள், அதே இரண்டு மொழிகளையும், மூன்று மொழிகளை தேர்வு செய்தவர்கள், அந்த மூன்று மொழிகளையும் தொடர்ந்து படிக்கலாம். திருத்தப்பட்ட கொள்கையை அமல்படுத்துவதாக கூறி, நடப்பு கல்வியாண்டின் பாதியில் மாணவர்களின் மொழித் தேர்வை மாற்றுமாறு பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது மொழியில் கட்டாய பொதுத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது இந்த ஆண்டும் நீடிக்கும். அதாவது மூன்றாவது மொழிக்காக மாணவர்கள் தனியாக சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வை எழுத வேண்டியதில்லை. மூன்றாவது மொழிக்கான மதிப்பீட்டை பள்ளிகளே உள்மதிப்பீடாக நடத்திக் கொள்ளும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், அவர்களின் இறுதிப் பொதுத் தேர்வு முடிவுகளை எந்தவகையிலும் பாதிக்காது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
