ஸ்விக்கி, சொமேட்டோ செய்யும் தில்லாலங்கடி வேலை; ஆய்வறிக்கையில் பகீர் தகவல்
ஸ்விக்கி, சொமேட்டோ செய்யும் தில்லாலங்கடி வேலை; ஆய்வறிக்கையில் பகீர் தகவல்
UPDATED : நவ 09, 2024 11:59 AM
ADDED : நவ 09, 2024 11:34 AM

புதுடில்லி: இந்தியாவின் முன்னணி உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி, சொமேட்டோ சில உணவகங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா (CCI) குற்றம் சாட்டியுள்ளது.
உணவு வீடு தேடி வர வேண்டும் என்றால், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களை நாடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், மக்கள் நம்பகத்தன்மையை ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதாக, 2022ல் புகார்கள் வந்தன. இந்த இரு நிறுவனங்களும் குறிப்பிட்ட சில உணவகங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக, தேசிய ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா (CCI) எனப்படும் நிறுவனங்களுக்கு இடையே சமமான போட்டியை உறுதி செய்யும் ஆணையம் விசாரணையை துவக்கியது.
விசாரணையில் இரு நிறுவனங்களும், குறிப்பிட்ட உணவகங்களுடன் பிரத்யேக ஒப்பந்தம் செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. சொமேட்டோ குறிப்பிட்ட சில உணவகங்களுடன் பிரத்யேக ஒப்பந்தங்களை செய்துகொண்டு, கூடுதல் ஆர்டர், குறைந்த கமிஷன் என்ற நடைமுறையை செயல்படுத்தியுள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் தங்களுடைய தளத்தில் மட்டும் பட்டியலிட ஒப்புக்கொள்ளும் உணவகங்களுக்கு அதிக ஆர்டர்களை வழங்குகிறது. இத்தகைய நடைமுறை, சமமான போட்டி சந்தையில் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு எதிரானது என்று விசாரணை முடிவில் உறுதி தெரிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ஸ்விக்கியின் உணவு ஆர்டர் மதிப்பு 3.3 பில்லியன் டாலராக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இது சொமேட்டோவை விட 25 சதவீதமாக குறைவாக இருக்கும். இரண்டுமே இப்போது ஆன்லைன் தளத்தில் முன்னணி நிறுவனங்களாக திகழ்கிறது.
தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இரு உணவு விநியோக நிறுவனங்களும் பதிலளிக்கவில்லை. காம்பெடிஷன் கமிஷன் விசாரணை அறிக்கை முடிவில் எத்தகைய நடவடிக்கை இருக்கும் என்பது விரைவில் தெரியவரும்.

