போலீஸ் ஸ்டேஷன்களில் காணாமல் போகும் 'சிசிடிவி'க்கள்: வழக்கு பதிந்தது சுப்ரீம் கோர்ட்
போலீஸ் ஸ்டேஷன்களில் காணாமல் போகும் 'சிசிடிவி'க்கள்: வழக்கு பதிந்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : செப் 05, 2025 12:53 AM

நாடு முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், போதுமான எண்ணிக்கையில், 'சிசிடிவி' எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
'நாடு முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும்' என, 2020ல் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.
செயல்படவில்லை
இரவு நேரங்களிலும் காட்சிகள் தெரியும் வகையிலான, 'நைட் விஷன்' திறன் உடைய 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தவும், விசாரணை அமைப்பு அலுவலகங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்படும் மரணங்களை தடுக்க ஒலிப்பதிவு வசதியுடைய கேமரா பொருத்தவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
'இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை' என, நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
நேற்றைய விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி, 2020ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களிலும் ஒலியை பதிவு செய்யும் வசதி இல்லை. பல நேரங்களில் கேமராக்கள் செயல்படாமல் உள்ளன.
அறிக்கை
காரணம் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என போலீசார் காரணம் சொல்கின்றனர். இது மிகவும் தீவிரமான பிரச்னை. கடந்த எட்டு மாதங்களில், 11 போலீஸ் ஸ்டேஷன்களில் கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
எனவே தான் இந்த விவகாரம் தொடர்பாக நாங்களே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்
-டில்லி சிறப்பு நிருபர் - .